
வாசலில் வந்த தூரல்
என்னை வா வா என்றது...
நீட்டிய கையில்
பொட்டென ஒரு துளி
படியிறங்கிய போது
கழுத்தில் கையில்...
சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்...
தலையுயர்த்தி வாய் திறக்க
தாகமற்ற தொண்டையில்
துளிகளின் பரவசம்
வலுத்த மழையில்
நனைந்தன துணிகள்
கும்மாளமாய்க்
குதித்து ஆடினேன்
கப்பல் விடக் காகிதம் தேடினேன்
அடுப்படியிலிருந்து
அவசரமாய் வந்து
உலர்த்திய துணிகளை
உருவிய அம்மா
ஓட்டமாய் வந்து
போட்டாள் முதுகில் பலமாக
கப்பல் விடும் ஆசை கனவாகிட
விசும்பலில் வலி கரைத்தேன்
தலை துவட்டித் துணி மாற்றியபடி
விரல் பதிந்த என் முதுகு தடவி
அழுகிறாள் அம்மா மழை போல!
No comments:
Post a Comment