Tuesday, August 31, 2010

கிருஷ்ண ( Krishna) ஜெயந்தி


அஷ்டமி ரோஹிணியில் அவதரித்த நம்ம கிருஷ்ணன் பர்த்டே ஸ்பெஷல். துவாபர யுகத்தில் பிறந்தவனுக்கு இது எத்தனையாவது பர்த்டே என்று கணக்கு போடலாம் என்று பார்த்தேன். நமக்கு ஒன்னும் ரெண்டும் எவ்வளவு என்று கேட்டாலே கண்ணு மண்ணு தெரியாது. அரண்டு போய்டுவோம். எஸ்.வி. சேகரின் வண்ணக்கோலங்களில் வரும் "ஒரு வேலையை ஒரு ஆள் முடிக்க அஞ்சு நாள்னா.... அதே வேலையை அஞ்சு பேர் செஞ்சா..... எத்தன...." என்று இழுக்கும் போதே நாம நாலு தெரு தள்ளி ஓடிக்கிட்டு இருப்போம். அதனால இந்த கணித ஆராய்ச்சியை தனியா ஒரு பதிவுல கண்டுக்கலாம்.

சாய்ராம் கோபாலன் ரெண்டு மூனு நாள் முன்னாடி கிளப்பி விட்டது மனதிற்குள் சுவிட்ச் ஆஃப் ஆகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாளைக்கு ஜென்மாஷ்டமி. பல பேருக்கு கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறானோ இல்லையோ சீடை, முறுக்கு நியாபகத்தில் வாய் அசைபோட ஆரம்பித்துவிடும். பண்டிகைகள் கொண்டாடத்தானே. முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு முறை வீடுகளில் செய்யும் பட்சணங்களை இன்று ஸ்வீட் ஸ்டால்களில் வாசலில் நிற்க வைத்து தினமும் கொடுக்கிறார்கள். நடு வாசலிலிருந்து பூஜை அறை வரை சின்ன கண்ணனுக்கு செல்லக் கால் வரைந்து, ஆலிலையில் சயனித்து கால் கட்டை விரல் கடிக்கும் கிருஷ்ணன் படத்திற்கு விதவிதமான புஷ்ப மாலைகள் அணிவித்து.....அது என்னவோ தெரியவில்லை அந்த மாயவனை, மாதவனை நினைத்தாலே மனம் சொல்லவொண்ணா ஒரு உவகை கொள்கிறது. அந்த லீலாவிநோதன் பக்தர்கள் தன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஸ்ருங்கார ரஸத்தை அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவன். மீரா, ஆண்டாள் போன்றோர் பாட்டாலே பக்தி செய்தார்கள். கண்ணடித்து காதலித்தார்கள். ஏதோ என்னால் முடிந்த ஒரு பாட்டுச்ச்சரம் கண்ணபரமாத்மாவின் திருவடியில்.


இது ஒரு கதம்பம். கர்நாடிக், திரை இசை, ஃபியூஷன் என்று கண்ணனைப் பற்றி வந்த எல்லாவற்றையும் கலந்து கட்டி தந்திருக்கிறேன். எம்.எஸ் அம்மா, ஜேசுன்னா, சுதா, அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் என்று பலரும் இங்கே வந்து இந்த கச்சேரி செய்கிறார்கள். அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடி கேளுங்கள். கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.



இது லேட்டஸ்ட் பாஷன் கண்ணன். மார்னிங் ராகா - சுதாவோட வாய்ஸ். எக்சலேன்ட்.



எம்.எஸ். சுப்புலட்சுமி கண்கள் சொருகி பக்தி ரசத்துடன் பாடும் பொழுது, நம்மை அவனிடம் இழுத்து செல்கிறது..



பஜரே எதுனாதம்....



ஜகதோதாரண... .. ஒன்ஸ் அகையின் சுதா....



ஒ.எஸ். அருண் - பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சே.... என்ன ஒரு பாவம்... (BHAVAM).

Friday, August 20, 2010

வரலக்ஷ்மி விரதம்

ஐந்து முகம் தீபம் ஏற்றி வாழை மரம் வைத்து மண்டபம்  அமைத்து லட்சுமிக்கு பிடித்தமான சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமியின் முக உருவம் அல்லது வெள்ளியால் ஆன வரலட்சுமி சிலையை வைத்தும் பூஜிக்கலாம். தாழம்பூ மற்றும் மலர்களால் லட்சுமியை அலங்கரிக்க வேண்டும். சிலை முன் வாழை இலை விரித்து, அதில் ஒரு படி பச்சரிசியை பரப்பி, அதன் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் படைக்க வேண்டும். சிலைக்கு மஞ்சள் நிற புதிய ஆடை அணிவித்து, பச்சரிசியின் மீது ஒரு கும்பம் வைத்து, அதில் புனித நீர் நிரப்ப வேண்டும்.


கும்பத்தில் சந்தனம், குங்குமம் வைத்து மாவிலையால் சுற்றி அலங்கரிக்க வேண்டும். வசதிக்கு ஏற்ப மோதகம், அப்பம், வடை, பொங்கல் போன்ற நைவேத்தியம் வைத்து மஞ்சள் கயிறுகளையும் பூஜையில் வைக்க வேண்டும். கணேச பூஜையும், கும்ப பூஜையும், லட்சுமி பூஜையும்  செய்து அஷ்டலட்சுமிக்கு மிகவும் இஷ்டமான அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபாராதனை செய்ய வேண்டும். பூஜைக்கு பின் வீட்டுக்கு வந்திருக்கும்  பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறை மந்திரங்கள் முழங்க வலது கையில் தானும் கட்டி,மற்ற பெண்களுக்கும் கட்ட வேண்டும். இந்த வழிபாட்டுக்கு பின், பெண்கள் விரதத்தை முடித்து சாப்பிட வேண்டும். பூஜைக்கு பின், ஒரு நல்ல நாளில் சந்தனத்தால் ஆன வரலட்சுமி உருவத்தை ஆறு, குளம் போன்ற நல்ல நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். இந்த விரதத்தால் மாங்கல்ய பலமும், மங்களமும், நீண்ட
ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.



திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும். கணவன், குழந்தைகளுக்கு நன்மை கிட்டும். மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள். வரலட்சுமி பூஜையின் போது லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திரம் படிப்பது மிகச் சிறப்பு!இந்த சுமங்கலி பூஜையை அனைவரும் செய்யலாம். மகாலட்சுமி அருள் பெறலாம் ..

மங்கள பொருட்கள் தாம்பூலம்
சுமங்கலி பெண்கள் 5 ,)
வெற்றிலை ,பாக்கு
பூ,பழம் ,மஞ்சள் , கண்ணாடி வலையல்
ஜாக்கட் பீஸ் ,தேங்காய்,கண்ணாடி ,
மஞ்சள் கயறு ,பிரசாதம் குங்கும சிமிழ்,தட்டு .
லக்ஷ்மி அஸ்டோத்தரம்


Thursday, August 19, 2010

சில்லுன மழை சாரல்

இன்று ஆகஸ்ட் இருபதும் தேதி காலை பத்து மணியளவில் சென்னையில் நல்ல மழை கொட்டியது. அப்போது சில்லுன மழை தூரல் என் மேல்



வாசலில் வந்த தூரல்
என்னை வா வா என்றது...

நீட்டிய கையில்
பொட்டென ஒரு துளி
படியிறங்கிய போது
கழுத்தில் கையில்...
சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்...

தலையுயர்த்தி வாய் திறக்க
தாகமற்ற தொண்டையில்
துளிகளின் பரவசம்

வலுத்த மழையில்
நனைந்தன துணிகள்

கும்மாளமாய்க்
குதித்து ஆடினேன்
கப்பல் விடக் காகிதம் தேடினேன்

அடுப்படியிலிருந்து
அவசரமாய் வந்து
உலர்த்திய துணிகளை
உருவிய அம்மா

ஓட்டமாய் வந்து
போட்டாள் முதுகில் பலமாக

கப்பல் விடும் ஆசை கனவாகிட
விசும்பலில் வலி கரைத்தேன்

தலை துவட்டித் துணி மாற்றியபடி
விரல் பதிந்த என் முதுகு தடவி
அழுகிறாள் அம்மா மழை போல!

Tuesday, August 17, 2010

அழகான அருமை குழந்தைகளுக்கு அம்புலிமாமா இணைய தளம்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருந்து இருக்கும் .அதிலும் 1980 1990 களின் சிறுவர்களின் முக்கிய பொழுது போக்கு சிறுவர் இதழ்கள் தான் கோகுலம் ,பூந்தளிர் .அம்புலிமாமா ,ராணி காமிக்ஸ் .லயன் ,திகில் .முத்து என சொல்லி கொண்டு போகலாம .ஆனால் கால ஓட்டத்தின் மாற்றங்களின் தொலைக்காட்சி ,இணையத்தின் பயன்பாடு அதிகம் வந்த பின் புத்தகம் படிப்பது என்பது மிகவும் குறைவு




இப்போது வரும் சொல்லும் படியான இதழ்கள் என்றால் சுட்டி விகடன் ,மற்றும் கோகுலம் தொலைக்காட்சி மூலம் கார்டூன் பார்க்க ஆசைப்படும் குழந்தைகள் புத்தக படிப்பு என்பது குறைந்து விட்டது




அதிலும் கார்டூன் நெட்வொர்க் ,போகோ .டிஸ்னி .சுட்டி போன்ற தொலைகாட்சிகள் அதிகம் வந்த இந்த காலத்தில் குழந்தைகள் இதழ் என்ற விஷயம் இல்லாமல் போக இன்னும் சாத்யம் அதிகம் உள்ளது

அந்த வகையில் தமிழில் பழமையான குழந்தைகள் இதழ் என்றால் அது அம்புலிமாமா என சொல்லலாம் .திரைபட தயாரிப்பகட்டும் குழந்தைகள் இதழ் ஆகட்டும் இந்திய முழுவதும் சாதனை செய்த இதழ் நாகி ரெட்டி அவர்களின் சந்தமாமா (அம்புலி மாமா )(ambulima news for children)




அப்படிப்பட்ட இதழை 1947 முதல் 2000 வரை சிறப்பான முறையில் படிக்க சிறந்த வசதிகள் செய்து உள்ளது சந்தமாமா இணைய தளம்

பழைய அம்புலி மாமா இதழ்களை (Old history news) படிக்கும் போது ஒரு தனி உற்சாகம் உண்டாகிறது பழைய இதழ்கள் மட்டும் இல்லாமல் பழைய விளம்பரங்கள் பார்க்க தனி வசதி உள்ளது .



பழைய கட்பெரி சாக்லேட் ,பாப்பின்ஸ் ,கோல்கேட் ,எம் ஜி ஆர் எங்க வீட்டு பிள்ளை ,அளிபாவும் 40 திருடர்கள் என பழைய திரைப்படங்களின் விளம்பரம் (history advertise) பீர்பால் கதைகள் கம்ப்யூட்டர் டிப்ஸ் குறும்புகார கோபாலு என பல படைப்புகள் பார்க்கலாம் ,படிக்கலாம்

உங்கள் குழந்தைகளுக்கு அறிமுக படுத்த சிறந்த் தளம்

அம்புலிமாம பார்க்க படிக்க இதை அழுத்தவும் (http://www.chandamama.com/lang/index.php?lng=TAM)

Friday, August 13, 2010

வீட்டில் இல்லத்தரசிகளுக்கு நேரம் போகவில்லையா?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்: தோட்டம் தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை.



அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.

சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள். தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும்.

அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.

எம்ப்ட்ராயட்ரிங்: துணிகளில் பூவேலை (எம்ப்ட்ராயட்ரிங்) செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம். இந்த நவீன காலத்தில் கணினி முன் அமர்ந்தால் நீங்கள் எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எத்தனையோ பூவேலை செய்யப்பட்ட துணிகளை உற்று கவனித்தால் அதன் போக்கு தெளிவாகத் தெரிந்துவிடும்.

அவ்வளவே, அதனை பழைய அல்லது உபயோகப்படுத்தாத துணிகளில் போட்டுப் பாருங்கள். முதலில் உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கும். பின்னர் அதன் நயத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். கடைகளில் எம்ப்ட்ராயட்ரிங் ப்ரேம் என்று ஒரு மரத்தில் கிடைக்கும். அதனை வாங்கி துணியை நன்கு டைட் செய்து கொண்டு பின்னர் துவக்குங்கள்.

பழகப் பழக புதிய புதிய டிசைன்களை நீங்களே உருவாக்குவீர்கள். மேலும் நீங்கள் வைத்திருக்கும் எத்தனையோ உடைகளில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு விதமான எம்ப்ட்ராயட்ரிங்குகளை போட்டுப் பாருங்கள். ஓரளவிற்கு நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர், உங்கள் கைக்குட்டை, துப்பட்டா, இரவு உடை போன்றவற்றில் முதலில் உங்கள் கைவண்ணத்தைத் துவக்குங்கள். பிறகு சாதாரண சுடிதாரில் கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் சிறிய சிறிய பூக்களை இட்டு நிரப்புங்கள்.

நீங்கள் போடப்போகும் டிசைனை முதலில் பென்சிலால் துணிப்பகுதியில் லேசாக வரைந்து கொள்ளுங்கள். அதன் மேலேயே பூவேலை வருவது போன்று செய்து பாருங்கள். பின்னர் பிளைன் சாரி வாங்கி அதன் இரு புறங்களிலும் அழகான பூக்களை வடிவமைத்து ஏதாவது நிகழ்ச்சிக்குக் கட்டிக் கொண்டு போகும் போது உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டேத் தனிதான் போங்க.

திறமையை வளர்க்கலாம் உங்களிடம் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதாவது ஒரு சிலர் பாடல் பாடுவது, நடனம், சமையல், நல்ல கல்வி அறிவு போன்றவை பெற்றிருப்பார்கள். இவர்கள் பெரிய பெரிய கல்வி நிலையங்களை எல்லாம் உருவாக்க வேண்டாம். நமக்கு கிடைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு நமக்குத் தெரிந்த கலையை சொல்லிக் கொடுத்தாலே போதும்.

பிற மொழி தெரிந்திருந்தால் அதற்காக வரும் பிள்ளைகளுக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பெடுத்து அவர்களுக்கும் உதவலாம். நாமும் பயனடையலாம். சமையல் பற்றி அதிக அனுபவமுள்ளவர்கள் எத்தனையோ பத்ரிக்கை, இணையதளங்களுக்கு தங்களது புதிய சமையல் குறிப்புகளை அனுப்பி புகழடையலாமே. புதிய கருத்துக்கள் இருந்தால் கட்டுரைகள் எழுதியோ அல்லது கவிதைகள் எழுதியோ புத்தகங்களுக்கு அனுப்பலாம்.

அவ்வளவு ஏன் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருப்பவர்கள் சிரிப்பு துணுக்குகளையும் அனுப்பி பரிசுகளைப் பெறலாம். இது எதுவுமே வேண்டாம் என்று சொல்பவர்கள், தினந்தோறும் அல்லது முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் அளவளாவி வரலாம். அவர்கள் ஏங்கும் ஒரே விஷயம் உறவுகள்தான். அதையும் நீங்கள் செய்த மாதிரி இருக்கும். உங்களுக்கும் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும்.