வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்: தோட்டம் தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை.
அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.
சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள். தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும்.
அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.
எம்ப்ட்ராயட்ரிங்: துணிகளில் பூவேலை (எம்ப்ட்ராயட்ரிங்) செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம். இந்த நவீன காலத்தில் கணினி முன் அமர்ந்தால் நீங்கள் எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எத்தனையோ பூவேலை செய்யப்பட்ட துணிகளை உற்று கவனித்தால் அதன் போக்கு தெளிவாகத் தெரிந்துவிடும்.
அவ்வளவே, அதனை பழைய அல்லது உபயோகப்படுத்தாத துணிகளில் போட்டுப் பாருங்கள். முதலில் உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கும். பின்னர் அதன் நயத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். கடைகளில் எம்ப்ட்ராயட்ரிங் ப்ரேம் என்று ஒரு மரத்தில் கிடைக்கும். அதனை வாங்கி துணியை நன்கு டைட் செய்து கொண்டு பின்னர் துவக்குங்கள்.
பழகப் பழக புதிய புதிய டிசைன்களை நீங்களே உருவாக்குவீர்கள். மேலும் நீங்கள் வைத்திருக்கும் எத்தனையோ உடைகளில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு விதமான எம்ப்ட்ராயட்ரிங்குகளை போட்டுப் பாருங்கள். ஓரளவிற்கு நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர், உங்கள் கைக்குட்டை, துப்பட்டா, இரவு உடை போன்றவற்றில் முதலில் உங்கள் கைவண்ணத்தைத் துவக்குங்கள். பிறகு சாதாரண சுடிதாரில் கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் சிறிய சிறிய பூக்களை இட்டு நிரப்புங்கள்.
நீங்கள் போடப்போகும் டிசைனை முதலில் பென்சிலால் துணிப்பகுதியில் லேசாக வரைந்து கொள்ளுங்கள். அதன் மேலேயே பூவேலை வருவது போன்று செய்து பாருங்கள். பின்னர் பிளைன் சாரி வாங்கி அதன் இரு புறங்களிலும் அழகான பூக்களை வடிவமைத்து ஏதாவது நிகழ்ச்சிக்குக் கட்டிக் கொண்டு போகும் போது உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டேத் தனிதான் போங்க.
திறமையை வளர்க்கலாம் உங்களிடம் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதாவது ஒரு சிலர் பாடல் பாடுவது, நடனம், சமையல், நல்ல கல்வி அறிவு போன்றவை பெற்றிருப்பார்கள். இவர்கள் பெரிய பெரிய கல்வி நிலையங்களை எல்லாம் உருவாக்க வேண்டாம். நமக்கு கிடைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு நமக்குத் தெரிந்த கலையை சொல்லிக் கொடுத்தாலே போதும்.
பிற மொழி தெரிந்திருந்தால் அதற்காக வரும் பிள்ளைகளுக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பெடுத்து அவர்களுக்கும் உதவலாம். நாமும் பயனடையலாம். சமையல் பற்றி அதிக அனுபவமுள்ளவர்கள் எத்தனையோ பத்ரிக்கை, இணையதளங்களுக்கு தங்களது புதிய சமையல் குறிப்புகளை அனுப்பி புகழடையலாமே. புதிய கருத்துக்கள் இருந்தால் கட்டுரைகள் எழுதியோ அல்லது கவிதைகள் எழுதியோ புத்தகங்களுக்கு அனுப்பலாம்.
அவ்வளவு ஏன் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருப்பவர்கள் சிரிப்பு துணுக்குகளையும் அனுப்பி பரிசுகளைப் பெறலாம். இது எதுவுமே வேண்டாம் என்று சொல்பவர்கள், தினந்தோறும் அல்லது முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் அளவளாவி வரலாம். அவர்கள் ஏங்கும் ஒரே விஷயம் உறவுகள்தான். அதையும் நீங்கள் செய்த மாதிரி இருக்கும். உங்களுக்கும் ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கும்.
Friday, August 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment