சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு 9 இரவுகள் நவராத்திரி என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி நவராத்திரி விழா பெண்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பூஜையாகும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை (செப்டம்பர் 19, 2010) துவங்கியுள்ளது. பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் ஏற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல் நாளில் இருந்து 9 நாட்கள் நவராத்திரி விழா துவங்குகிறது. இந்த நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழாவில் 9 நாட்களும் 3 சக்திகளும் முப்பிரிவாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தை பூஜிக்கும் வகையில் நவராத்திரி அமைந்துள்ளது.
முதல் 3 நாட்கள் துர்கா தேவியாகவும், மாயாசக்தியான மகா காளியாகவும் (துர்கா), அடுத்த 3 நாட்கள் கிரியா சக்தியான மகாலட்சுமியாகவும் கடைசி 3 நாட்கள் ஞான சக்தியாகவும் சரஸ்வதி தேவியாகவும் அம்பாள் அருள்பாலிக்கிறாள்.
தமிழகத்தில் கொலு வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தசரா என்றும், துர்கா பூஜை என்றும் பல்வேறு பெயர்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் நிறைவாக சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் பண்டிகைகளாகக் கொண்டாடப்படும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
source: http://tamil.webdunia.com